Previous
பாகம் 6
சென்ற பதிவில்
வினோத் குமார் என்பவரின் கேள்வி:
ஜோதிடத்தில் உள்ள உச்சம், நீசம், வக்கிரம் போன்றவை சதுரங்கத்தில் இருக்கிறதா ?

பதில்:
விளையாட்டு, ஆட்சி நிலையில் ஆரம்பிக்கப் படுகிறது. உச்சத்தில் (அதிகபட்ச இட மதிப்பு) வெற்றியும், நீசத்தில் (மிகக் குறைந்த பட்ச இடமதிப்பு) தோல்வியும், வக்கிரத்தில் தற்காப்பு ஆட்டமும் எனக் கொள்ள வேண்டும். பொதுவாக சதுரங்க ஆட்டத்தின் பிரச்னைகள் பாதி மூவைக் கொண்டு ஆராயப் படும் விதம் அறிவோம். அது போன்றுதான் ஜாதகப் பொருத்தமும். சதுரங்கத்தில் ஆரம்பம், இடை, முடிவு என்று ஆட்டங்கள் பலவிதமாக அலசப்படுகிறது. (Opening Game, Middle Game, End Game,)

http://en.wikipedia.org/wiki/User:Sentriclecub/Gothic_Chess_openings_middlegame_and_endgame

பொதுவாக ஜாதகம் என்பது பாதி விளையாடிய விளையாட்டின் நிலைமை எனக் கொள்ள வேண்டும். இந்த கேம்மில் யார் ஜெயிப்பார்கள் என்று அலசுவதே ஜாதகப் பொருத்தம் பார்ப்பதுதான். பொதுவாக நீங்கள் பார்த்திருக்கலாம், செஸ் பற்றிய புத்தகங்கள் எல்லாம் செஸ்ஸை எப்படி விளையாடுவது என்பதைப் பற்றி இருக்காது. ஏனென்றால் அதன் விதிகள் மிகவும் எளிமையானவை அதை இரண்டு பக்கங்களில் முடித்துவிடலாம்.

ஆனால் செஸ் புத்தகங்கள் முற்றிலும், 99 சதவீதம், பாதி விளையாடிய, பலவிதமான விளையாட்டின், திருப்பு முனைகளால் ஏற்படும் மாற்றங்கள், மற்றும் தீர்வுகள் (Chess problems and solutions) பற்றியவையாகத்தான் இருக்கும்.

கேள்வி:
உங்கள் கருத்தின் தேவைக்கு தகுந்த மாதிரி அறிவியலை மாற்றிக் கொள்வீர்களா? ஒரு நேரம் சூரிய மைய சித்தாந்தம் தான் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது என்கிறீர்கள் மற்றொரு நேரத்தில் பூமி மையச் சித்தாந்தத்தை கலந்து சொல்கிறீர்கள் எதை எடுத்துக் கொள்வது.?

பதில்:
இதில் என்னுடைய திணிப்பு, மறைப்பு என்று எதுவுமில்லை. உங்களுக்கு ஜாதகம் தெரியும் என்றால் இந்த விஷயம் எவ்வளவு உண்மை என்பது சொல்லப்பட்ட விஷயத்தில் தெளிவாகி இருக்க வேண்டும். ஜோதிட அறிவியலைத்தான் உள்ளது உள்ளபடி எடுத்தாண்டுள்ளேன். மேலும் அவற்றிலுள்ள அறிவியலை எடுத்து விளக்கியுள்ளேன்.

நாம் ஒன்றும் இந்த சூரிய மண்டலத்தின் மேலே இருந்து பார்வையிடும் பார்வையாளர்கள் அல்லவே? நாம் இந்த சூரிய மண்டலத்தின் உள்ளே, அதுவும் பூமியின் மேற்பரப்பில் தானே இருக்கிறோம். அதிலும் ஜோதிடம் என்பது அக்காலத்தின் தேவையை ஒட்டி, மனிதனை மையப் படுத்தி உருவாக்கப் பட்ட அறிவியல், ஆகவே நாம் கணக்கிட வேண்டியது மனிதனை மையமாக கொண்ட, பூமி மையச் சித்தாந்தம் தான். மனிதனுக்கு, மனிதன் சொல்லி எளிதில் விளங்கிக் கொள்வதற்காகத் தான் பூமி மையச் சித்தாந்தம்.

"சூரியமண்டல பார்வையாளர்" களுக்கு கிழக்கு, மேற்கு என்று நாம் திசை சொல்லிக் கொள்வது படு கேலிக் கூத்தாகத் தெரியும். ஆனால் நமது அன்றாட வாழ்வில் கிழக்கு, மேற்கில் எந்த சிக்கலும் இல்லையே அது போன்றுதான் பூமி மையச் சித்தாந்தத்தினால் எந்தச் சிக்கலும் இல்லயே. எல்லாமே ஏதோ கற்பனையில் தோன்றியதை எழுதி வைத்தவை அல்ல. ஒவ்வொன்றும் பலநூறு வருடங்கள் தினசரி கவணிக்கப் பட்டு ஆவணப்படுத்தப் பட்டவைதானே. தவறு இல்லாத வரை எந்தச் சித்தாந்தமாக இருந்தால் என்ன? அது மட்டுமில்லாமல் நமது முன்னோர்கள் இரண்டு விதமான சித்தாந்தங்களையும் தெரிந்து வைத்திருந்தனர் என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளது. அதை தேவைப்பட்டால் இன்னொரு சந்தர்ப்பத்தில் விவாதிக்கலாம்.

கேள்வி: அது சரி, புதன் அஸ்தங்கத்தில் சிக்கிவிடும் என்றால் என்ன?.

அஸ்தி என்றால் சாம்பல். அஸ்தமனம் என்றால் எரிந்து மறைவது. ஆகவே அஸ்தங்கம் என்றால் எரிதல் எனப் பொருள் கொள்ளலாம். எந்த கிரகமாவது சூரியனின் திசையில் சூரியனுக்கு முன்பாகவோ பின்புறமாகவோ குறிப்பிட்ட டிகிரிவரை நின்றால் அவர்கள் அல்லது அவர்களது சக்தி சூரியனால் எரிக்கப்பட்டு விடும். அதாவது சூரியனின் சக்திக்கு முன் அவர்கள் சக்தி எடுபடாது. இதைத்தான் சூரியனின் நட்சத்திர அந்தஸ்து என்பேன். இதில் முக்கியமான விஷயமே இந்த எரிக்கும் குணாதிசயம்தான். இது வேறு எந்த கிரகத்துக்கும் கிடையாது. "கிரகம்" என்பது ஜோதிடத்தைப் பொறுத்தவரை "வானியல் சார்ந்த பொருள்" என்பதுதான் சரியான விளக்கம். இது புரியாத அரை வேக்காட்டுப் பகுத்தறிவு வாதிகள் சூரியனை கிரகமாக வைத்திருக்கிறார்களே என்று முட்டாள்தனமாக, கழுதையாய் கத்துகிறார்கள். இவர்களுக்கு யார் எடுத்துக் சொல்லி புரிய வைப்பது எனத் தெரியவில்லை.

அது மட்டுமல்ல ஜோதிடத்தை கண்டுபிடித்தவன், ஒவ்வொரு கிரகத்தின் அளவுக்குத் தகுந்தவாறு குறிப்பிட்ட டிகிரி வரை தான் சூரியனின் சக்தி மறைக்கும் என்பதையும் அளந்து சொல்லியுள்ளான். எத்தனை டிகிரி என்பது கிரகத்தின் அளவு, மற்றும் தூரம் ஆகியவற்றைப் பொறுத்து கணக்கிட்டு கூறியுள்ள பாங்கை நோக்கும் போது இது தெய்வீக வாய் மொழியோ எனக் கூட எண்ணத் தோன்றுகிறது.

செவ்வாய் 17 டிகிரி,
புதன் 13 டிகிரி,
குரு 11 டிகிரி,
சுக்கிரன் 8 டிகிரி,
சனி 15 டிகிரி,
சந்திரன் 12 டிகிரி,

புதனுக்கு அஸ்தங்கம் மட்டுமல்ல அடிக்கடி வக்கிரத்திலும் சஞ்சரிப்பதால் அதை விளையாட்டில் எடுத்துக் கொள்ளவில்லை போலும்.

கேள்வி:
யுத்தகளத்திற்கு ராஜா சரி, ஆனால் இங்கு எப்படி ராணி வந்தார்.? சூரிய, சந்திரர்கள் ஆண்கள்தானே?.

பதில்:
ஆதியில் இந்தியரின் செஸ் விளையாட்டுப்படி அது ராணியாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதை ஒரு சிறிய ஆராய்ச்சியின் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்தியாவில் எந்த அரசனாவது யுத்தகளத்திற்கு ராணியை அழைத்துச் செல்வானா? அல்லது ராணி யுத்தத்தில் பங்கு பெறுவார்களா? அரசன் போர்க்களத்தில் தோற்று விட்டான் என்று தெரிந்தாலே அரன்மனையில் தீக்குளிக்கும் வழக்கமுடையோர், இந்நாட்டவர், அவர்களை போர்க்களத்தில் போராடுவது போல் சித்தரிப்பது விளையாட்டை தத்து எடுத்தவன், இட்டுக் கட்டிய கதை என்பது தெளிவாகப் புரியவில்லையா?. "யுத்தக்களத்தில் பெண்கள்" என்பது பண்டைய மரபுக்கு ஒத்து வராத ஒன்று. (தவிர்க்க முடியாத விதி விலக்குகளை உதாரணம் காட்டி மொக்கையா விவாதத்திற்கு இழுக்காதீர்கள்). அதிலும் ராஜாவை விட ராணிக்கு அதிகாரம் அதிகம் தரப்படுவது இந்திய மரபுக்கு முரணானது. ஆகவே அது ராணி அல்ல உண்மையில் அது தளபதி அல்லது மந்திரியாகத்தான் இருக்கமுடியும். அவருக்குத்தான் யுத்தகளத்தில் ராஜாவை விட அதிக அதிகாரம் உள்ளது. ராஜா ஒருவர்தான் இருக்கமுடியும் அது போல் மந்திரியும் ஒருவர்தான் இருக்கமுடியும்.


வெளி நாட்டினர் தங்களது சீட்டுக் கட்டில் ராணியை வைத்து இருப்பதால் செஸ் ஆட்டத்திலும் மந்திரிக்கு பதிலாக ராணி என மாற்றி விட்டனர் போலும். நல்லவேளை ஜோக்கர் என்று யாருக்கும் பெயர் மாற்றவில்லை. மதகுரு என்பவருக்கு எல்லா மனித இனங்களிலும் முக்கியத்துவம் அளிக்கப் படுவதால் இங்கும் அவர் பிஷப் என பெயர் மாற்றம் பெற்றார். அது மட்டுமில்லாமல் ராஜாவின் தலையில் சிலுவையும் வைத்து விட்டனர். உண்மையில் ராஜாவின் தலையில் சூரியனும் மந்திரியின் தலையில் பிறைநிலவும் இருக்க வேண்டும்.

ஆராய்ந்து பார்த்தால் சீட்டுக் கட்டும் ஜோதிடத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கலாம். ஒரு வருடத்தின் நாட்களாகிய 364 ஐ சந்திரனின் சுழற்சிக் காலமாகிய 28 நாட்களால் வகுத்தால் (13 மாதம் ) வருகிறது. 13 என்பது சீட்டுக்களின் எண்ணிக்கை. ஒருவருடத்தின் மொத்த வாரங்களை கணக்கிட்டால் 52, இது மொத்த சீட்டுக்களின் எண்ணிக்கையை குறிப்பதாகும். மற்றபடி ராஜா-சூரியன்,ராணி-சந்திரன், ஜாக்-சுக்கிரன்,ஜோக்கர்-சனி. இதனுடைய தோற்ற காலத்தின் வரலாற்றை நோக்குங்கால் இதுவும் சதுரங்கத்தை ஒட்டி வருகிறது.
தொடரும்........................................

இரா.சந்திரசேகர்,
பழனி. 
அடுத்த பாகம் 7

3 comments:

Unknown said...

பதிலளித்ததற்கு நன்றி...

இன்னொரு கேள்வி கேட்கலாமா ?

Chandru said...

Vinoth Kumar
இன்னொரு கேள்வி கேட்கலாமா ?
தாரளமாக கேளுங்கள்.

Unknown said...

சூரியன் ராசா
சந்திரன் மந்திரி
சுக்கிரன் தளபதி
சனி சிப்பாய்
செவ்வாய் குதிரை
ராகு கேது இல்லை
புதன் இல்லை.

யானை .. யார்
குருவாக தான் இருக்க வேண்டும்...என நினைக்கேரன்..
என் புரிதல் சரியா.

இன்னொரு கேள்வி .. சூரியன் சந்திரன் தவிர மற்ற கிரகங்கள் ஏன் இரண்டாக உள்ளது..?
2 யானை , 2 தலைபத் i 2 குதிரை . ஏன் ..

pls remove word verification its a bit harder to post comment

top