உயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 1)
உயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 2)
உயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 3)



முன்பதிவுச் சுருக்கம்

அண்டத்தின் தோற்றம் பற்றி விளக்குவது பெருவெடிப்பு (BigBang) கொள்கை

உயிரின் தோற்றம் பற்றி விளக்குவது டார்வினின் பரிணாமக்(Evolution) கொள்கை.

பெரு வெடிப்பு கொள்கை ஒத்துக் கொள்ளப்பட்டதா? ஆம் அண்டத்திலுள்ள காலக்ஸிகள், நெபுலாக்கள், சூப்பர் நோவாக்கள், கருந்துளைகள்,(BlackHoles) நட்சத்திரங்கள், நட்சத்திர மண்டலங்கள்,(சூரியமண்டலம்) ஆகியவை அனைத்தும் பொதுவான ஒரு மையத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விலகிச் செல்வது பலவகைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வெடிப்பினால் தோன்றிய முதல் பொருளாக ஹைட்ரஜன் என்னும் வாயுதான் எங்கும் இருந்தது, இருக்கிறது. பெரு வெடிப்பின் வெப்பத்தினால் சேர்க்கையும், பிரிவும்( Fusion & Fission) ஏற்பட்டு ஹைட்ரஜன் மூலம் ஏற்பட்ட பொருட்கள் பல வகைப்பட்டன. பூமியும் அதன் பொருட்களும் அவ்வழித் தோற்றம்தான்.

பூமியும் அதிலுள்ள பொருட்களும் தோன்றி பல கோடி ஆண்டுகள் ஆனபோதிலும் புதிய பொருட்கள் தோன்றுவதும், பொருட்களின் மாற்றமும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பொருட்கள் எந்த வித வேதியல் வினைகளில் ஈடுபட்டாலும் ஒன்றிலிருந்து இன்னொன்றாகத்தான் மாறுகிறது என்றும், எந்த சூழ்நிலையிலும் முற்றிலுமாக அழிவதில்லை என்பதையும் கண்டுபிடித்தனர். எப்பொருளுக்கும் அழிவில்லை என்பதால் பொருள் அழிவின்மைத் (Conservation of Matter ) தத்துவம் தோன்றியது. பொருட்களின் தோற்றமும், மாற்றமும், இயக்கமும் ஏன் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க வேண்டும் என்ற காரணத்தை ஆய்வோம்.

பொருட்களை ஆராயத் தொடங்கிய அறிவியலார்கள் உலகில் மொத்தமே 92 பொருட்கள்தான் உள்ளன என்றும் அவற்றின் மாறுபட்ட கலவையினால் எண்ணிலடங்கா பொருட்கள் தோன்றின எனவும் கண்டு கொண்டனர். ஆராய்ச்சியின் தொடர்ச்சியினால் அந்த 92 பொருட்களும் மிக நுண்ணிய அணுக்களால் ஆகியவை என்றும், அந்த அணுக்களும் இரண்டு நுண்ணிய அடிப்படை துகள்களால் ஆனவை என்றும் அறிந்தனர். உலகத்திலுள்ள 92 பொருட்களும் இந்த இரண்டு துகள்களின் மாறுபட்ட எண்ணிக்கையினாலும் அமைப்பினாலும் உருவானவையே என்று கண்டு பிடிக்கப்பட்டது. . அவைகள் எலக்ட்ரான், புரோட்டான் எனவும் இவை இரண்டும் சேர்ந்து உருவான மற்றொறு துகள் நியூட்ரான் எனவும் பெயரிடப் பட்டது.

பொருட்களில் இந்த துகள்கள் அமைந்த விதத்தை கண்டறிந்து பலர் (ஜேஜே தாம்ஸன், டால்டன், ரூதர் போர்டு) கூறினர். அதில் முக்கியமாகக் கருதப்படுபவர் நீல்ஸ் போர் என்பவராவர். அது பற்றிய ஆராய்ச்சி இன்றளவும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது அந்த நுண்ணிய துகள் பற்றிய கருத்துக் கோட்பாடுகளும் மாறிக் கொண்டே இருக்கிறது. இருந்தாலும் நீல்ஸ் போர் அறிவித்த அணு அமைப்பின் மாதிரியில் (Bohr's Model) இது வரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை. புத்தம் புதிதாக வந்த ஸ்ட்ரிங் கொள்கையும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றாலும், அதுவும் நீல்ஸ் போர் மாதிரியில் பெரிதாக எந்த மாற்றமும் எற்படுத்தப் போவதில்லை. ஆகவே அதை அடிப்படையாகக் கொண்டே தொடருவோம்.

Bohr's Model




இந்த நியூட்ரான், புரோட்டான், எலக்ட்ரான் அணுவாக எப்படி அமைந்துள்ளது என நீல்ஸ் போர் வரைந்து விளக்கிய அமைப்புக்கு பெயர் ”போர் மாதிரி” (Bohr's Model) எனப் படுவதாகும். அதாவது சூரியமண்டலத்தில் சூரியனும், கிரகங்களும் எப்படி அமைந்துள்ளதோ அது போன்று, மையத்தில் நியூட்ரான், புரோட்டான்கள் அமைதியாக இருக்க எலக்ட்ரான்கள் அதைச் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. சுற்றிக் கொள்வதிலும் தங்களுக்குள்ளே சில கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டுள்ளன. அதை என்னவென்று அறிவோம்.இதுவரை நான் எழுதியது உங்களுக்கு சரியென்று பட்டால் நமக்குள் ”கெமிஸ்ட்ரி”ஒத்துப் போகிறது என்று அர்த்தம். ஆகவே இனிமேல் கெமிஸ்ட்ரியைப் பார்ப்போம். போன பதிவில் வைரமுத்து கவிதை ஒன்றைப் பார்ப்போம் என்று கூறியிருந்தேன். அதைத்தான் கீழே கொடுத்துள்ளேன்


எட்டுக்குள்ளே உலகம் இருக்கு ராமைய்யா
நான் புட்டு புட்டு வைக்கப் போறேன் கேளய்யா
………..கவிஞர் வைரமுத்து.

எட்டு எட்டாக பிரித்துப் பார் என்று மனிதனின் வயதை பிரித்து வாழ்க்கையை புட்டு புட்டு வைத்தார். அவர் பார்த்த பார்வை வேறு . நாம் பார்க்கப் போகும் பார்வை வேறு. அவர் மனித வாழ்க்கையைப் பார்த்தார், நாம் பொருட்களைப் பார்க்கப் போகிறோம். இந்த உலகம் மற்றும் பொருட்களையும் எட்டு எட்டாக பிரித்து ஆராயப் போகிறோம். நமது கவிஞருக்கு முன்பே எட்டின் மகத்துவம் எல்லோரையும் எட்டி விட்டது போலும்.

ஆங்கிலேயர்கள் இசையை சுரம் பிரிப்பது எட்டாகத்தான் பிரிக்கிறார்கள் (Octaves). சதுரங்க கட்டத்தில் கூட கட்டங்கள் எட்டுக்கு எட்டாகத்தான் உள்ளது. திசைகள் எட்டு. சித்திகள் எட்டு, ஜாதகத்தில் எட்டாமிடத்தை (ஆயுளை) பார்த்துவிட்டுத்தான் பலன் சொல்லவே ஆரம்பிக்கிறார்கள்.

எதுகை மோனையுடன் எட்டு நட்டம் என்பார்கள். வாகனத்தின் பதிவு எண்ணின் கூட்டுத் தொகை எட்டு வரக்கூடாது என்பார்கள். இறந்தவருக்கு எட்டாம் நாள் காரியம் செய்வதை ”எட்டுக்கு” என்பார்கள்.
.
கம்ப்யூட்டரின் அடிப்படை மெமரி அளவு 1 பிட்டில் ஆரம்பித்து 64 பிட்டாக வளர்ந்து விட்ட இந்த காலத்திலும் கூட எட்டு பிட்டுகளை அடுக்கி வைத்து கொண்டு அதைத்தான் மெமரியின் அளவுகோலான பைட் (Byte) என்று கூறுகிறார்கள். ஆக ஏதோ நன்மை தீமை எல்லா வகையிலும் எட்டு முக்கியத்துவம் அடைந்து விட்டது.

முதன் முதலாக 1789 இல் லாவாய்சியர் என்பவர், அதுவரை அறியப்பட்ட 33 மூலகங்களைப் (தனிமங்களை) பற்றி ஆய்ந்து தகவல் வெளியிட்டார். கண்டுபிடிக்கப் பட்ட அந்த மூலகங்களூக்குள் ஏதோ ஒரு வகையில் ஜாதி பிரிக்காவிட்டால் மனிதன் அவை முழுமை அடைந்ததாக நினைக்கமாட்டான் போலும். ஆகவே அவற்றையும் வகைப் படுத்த முதலில் மூன்று மூன்றாகப் (Triads) பிரித்துப் பார்த்தான். பின்னர் ஏழுஏழாக பிரித்தான் ஏழை அடிப் படையாக கொண்ட ஒருவித ஒற்றுமையைக் கொண்டு பிரித்தான். அதற்குப் பின் மூலகங்களின் இயல்பிற்கும் ஏழுக்கும் உள்ள தொடர்பு வலுப் பெற ஆரம்பித்தது. கிட்டதட்ட ஒரே மாதிரியான குணங்கள் கொண்ட மூலகங்களாகப் பிரிக்கும் போது தங்களுக்குள்ளும் சில குழுக்கள், கூட்டங்கள், உள்ளதை காட்டிக் கொண்டன. அதிலும் உயர்ந்தவை (Noble Metals), அபூர்வமானவை (Rare Earths), இடைப்பட்டவை (Transistion elements), மந்தமானவை (Inert Gases), உக்கிரமானவை (Alkali metals),உலோகமற்றவை(Non-metals) என குழுக்கள் உள்ளன.

அதிலும் ஒவ்வொரு குழுவிலும் குணங்கள் படிப் படியாக தீவிரமாகி இருக்கக் கண்டனர். அந்த அடிப்படையில், இருக்கின்ற மூலகங்களை வரிசைப் படுத்தும் போது ஏழுக்கு அடுத்து, வரிசையில் முதலாவதாக அமையும் மூலகத்தினால் சிறு குழப்பம் ஏற்பட்டது. பின்னர் எட்டை அடிப்படையாக வைத்து பிரித்தவுடன் குழப்பங்கள் மறைந்து விட்டது. ஆனால் அவைகளோ எட்டை அடிப்படையாக கொண்ட பிரிவினையை ஏற்கனவே தமக்குள் வைத்துள்ளன என்று பின்னர் அறிந்து கொண்டான். உலகத்தில் இருக்கின்ற மூலகங்களை அதாவது தனிமங்களை எட்டு எட்டாக வகைப் படுத்தினர்.

மேலை நாட்டவரின் ஸ்வரங்கள் எட்டு (Octaves) என்பதாலும் எட்டை அடிப்படையாக கொண்டு மூலகங்களின் புதிய அட்டவணை (Periodic Table) தயார் செய்யப்பட்டதால் இந்த அட்டவணையை எட்டின் விதிப்படி அமையப்பெற்ற அட்டவணை என்றனர்.

இந்தியர் சுரத்தை ஏழாகப் பிரித்தாலும் சொல்லும் போது என்னவோ ச,ரி,க,ம,ப,த,நி,ச என்கிறார்கள். எண் வரிசையில் சூன்யத்தை இடையில் செருகி 0,1,2,3,4,5,6,7,8,9 ஒன்பது வரை சொல்லி ஒன்று இல்லாதது போல் தோன்றினலும் இருக்குமாறு செய்தது போல் ச,ரி,க,ம,ப,த,நி,ச என்று பகுத்து சப்த ஸ்வரங்கள் என்றான்.ஆக ஸ்வரங்களின் அடிப்படையிலும் அட்டவணை அமையப் பெற்றதாகக் கருதலாம். ஆக இசைக்கும் எட்டுக்கும் சம்பந்தமுண்டு. அல்லது இசைக்கும் இயற்கைக்கும் பந்தமுண்டு.

முதலில் அந்த எட்டாவது மூலகத்தை மனிதன் அடையாளம் கண்டு, பிரித்து வைக்க மிகவும் சிரமப் பட்டுவிட்டான். ஏனென்றால், அது எவ்வகை குணமும் காட்டவில்லை. அதுதான் ”நியான்” எனப்படும் வாயு. இதை அடையாளம் கண்ட பின் அதன் அண்ணன்மார்களை எளிதில் கண்டு கொண்டனர்.

இந்த இடத்தில் மாண்ட்லீப் என்னும் ஆராய்ச்சியாளரைப் பற்றி கூறாவிட்டால் என்னுடைய உடம்பிலுள்ள ரசாயானத்திற்கு கூட கோபம் வந்துவிடும். உலக மக்கள் அனைவராலும் இன்றும் போற்றப்படும் அந்த அட்டவணையை வடிவமைத்ததில் முக்கிய பங்கு மாண்ட்லீவ் என்பவர்க்குத்தான். அதுவரையிலும் உலகத்தில் கிட்டதட்ட ஐம்பது தனிமங்கள்தான் அறியப்பட்டிருந்தது. இயற்கை தனது ரகசியங்களை அவ்வளவு எளிதாக யாருக்கும் காட்டி விடாது போலும். ஏனென்றால், இயற்கையின் ரகசியங்களை கண்டுபிடிப்பதற்குள் ஏராளமானவர்கள் உடல், பொருள், உயிர் இழந்திருந்தனர்.

தொடரும்.............

8 comments:

guna said...

good good good waiting for next part

Chandru said...

குணா அவர்களுக்கு
வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

நாட்டாமை said...

நீண்ட இடைவெளி ஆனாலும் பொறுத்திருக்கிறோம்.

அந்த ரகசியத்தை எபொழுது வெளியிடுவீர்கள்

Chandru said...

நாட்டாமை
வ்ருகைக்கும் பதிவுக்கும் நன்றி. ரகசியம் வரும் பதிவுகளில் ஊடாடி வரும்.

ஆனால் எப்படியும் முடிவில் தெரிந்துவிடும்.

Unknown said...

ஏதோ கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதில் பிஸிக்ஸ் புரிந்தது. ஆனால் கெமிஸ்ட்ரி புரியுமா?

நாட்டாமை said...

அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம். நீண்ட இடைவெளி விடுகிறீர்கள். நாங்கள் தொடர்புகளை மறந்து விடுவோம்.

கையேடு said...

//அந்த அணுக்களும் இரண்டு நுண்ணிய அடிப்படை துகள்களால் ஆனவை என்றும் அறிந்தனர்.//

இவ்வரியில் குறிப்பிடப்படும் இரண்டு நுண்ணிய அடிப்படைத் துகள்கள், புரோட்டான் மற்றும் எலக்ட்ரான் என்றால் இது தவறான தகவலைத் தருகிறது.

புரோட்டான் அடிப்படைத் துகள் கிடையாது.


//இருந்தாலும் நீல்ஸ் போர் அறிவித்த அணு அமைப்பின் மாதிரியில் (Bohr's Model) இது வரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை.//

இதுவும் முழுக்க உண்மையில்லை.. போரின் அணுமாதிரி எளிய அணுக்களுக்கு மட்டுமே மிகச் சரியாகப் பொருந்த முடியும். குவாண்டம் அணுக்கொள்கையின் உதவியுடன் மேலும் மேம்படுத்தப்பட்டது போரின் அணு மாதிரி.

Chandru said...

நன்பர் கையேடு அவர்களுக்கு வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.

இங்கு ஒரு சுருக்கமான முன்பதிவுதான் கொடுத்திருக்கிறேன்.

மூன்றாம் பாகத்தில் சில விளக்கங்கள் உள்ளன அதையும் பார்த்துவிட்டு கருத்துக்களை பதியுங்கள்.

top